உடல் நலம் பேணுவோம் : தலைவலி - பத்மா அர்விந்த்
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.
சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு விடக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக்குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது , பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டும் இன்றி சில சமயம் தலியில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை).மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.
அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் emphysema வரும் முன் அடிக்கடி தலைவலி ஏற்படும். குளிர்காலத்தில் மூடிய சன்னல்கள் காற்றை வெளியேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவின் அதிகரிக்கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி காப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்ததில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு காப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி.
அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எத்தனை நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மை அறிந்து குணமாக்க முடியும்.
முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலி அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்க பட வேண்டியவை.
வேலை பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி: வலி சாதாரணமாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையை சுற்றி ஒருவித அழுத்தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத்தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது.
Migraine: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 ம ணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிகரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதிகரிக்கும்.
சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றை தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்துழைப்பும் குறையக்கூடும்.
Cluster தலைவலி: வலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விட கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும்.
இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும்.
பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது.
இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக்கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உப்பதைகளை ஏற்படுத்திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்துவிடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவதோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்ரன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்துகளின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதல் எப்படி போக்குவது என்பதும் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக