Add this page to Favorites! அன்பார்ந்த வாசர்களே தங்களது வருகைக்கு நன்றி ! இந்த வலை தளத்தை தங்களது Favourite பகுதியில் Book Mark செய்து கொள்ளவும். மருத்துவ சம்பந்தமான கட்டுரைகள் தொடர்ந்து வெளியடப்படும். தங்களது ஆரோகியமான ஆக்கபூர்வமான கருத்துக்களை கருத்துரை பகுதியில் வெளியிடவும். அறிவோம் மருத்துவம்: ஒவ்வாமை(அலர்ஜி)
இவ்வுலக வாழ்க்கை உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60

சனி, 21 மார்ச், 2009

ஒவ்வாமை(அலர்ஜி)

பொதுவாகவே, பல நுற்றுக்கணக்கான பொருட்கள் ஒவ்வாப் பொருட்களாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால், ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கும் குறிப்பாக, எந்தப் பொருள் ஒவ்வாமை அறிகுறிகளை அல்லது கேடுகளை அல்லது ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!

இருந்தாலும், ஒவ்வாமையினால் தொல்லைக்குள்ளான ஒருவருடைய சுற்றுப்புறத்தில், என்னென்ன பொருட்களெல்லாம் இருக்கின்றன, அவற்றுள்அதிகமாக ஒவ்வாப் பொருளாக இருக்கக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டால், ஒருவருக்கு ஒவ்வாமைக் கேடுகளை ஏற்படுத்தும் பொருளை அல்லது பொருட்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஒவ்வாமை தன்மையுடைய ஒருவருக்குப் பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களே ஒவ்வாப் பொருட்களாக இருக்கின்றன என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்!

நோய் நிர்ணயம் _ சிந்தித்தறிதல்

ஒருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட என்னென்ன பொருட்கள் காரணங்களாக உள்ளன என்பதைக் கண்டறிய, முதலில் ஒவ்வாமை தன்மையுடையவர் கூறும் அறிகுறிகளை ஒன்றுவிடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவருடைய குடும்பத்தைப் பற்றியும், அவர் செய்யும் தொழிலைப் பற்றியும் வாழும் இடத்தைப் பற்றியும் மறக்காமல் கேட்டறிய வேண்டும். பொதுவாக ஒவ்வாமை நோய்கள், ஒரு மரபுக் கோளாறு போலவே தெரிகின்றன. குடும்பத்தில் ஏற்கனவே வேறு யாருக்காவது ஆஸ்துமா, கரப்பான், தும்மல், அரிப்பு போன்ற ஒவ்வாமை நோய்கள் உள்ளவர்களே, ஒவ்வாமையினால் அதிகமாகப்பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில், ஒரு குடும்பத்தில் யாராவது இதுபோன்ற ஏதாவது ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தால், அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறுயாராவது ஒவ்வாமையினால் கட்டாயம் தொல்லைக்குள்ளாவார்கள் என்றும் சொல்லமுடியாது. அதே போல ஒன்றுபோலுள்ள இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்னொரு குழந்தை எந்தவிதமான ஒவ்வாமை கேட்டையும் பெற்றிருக்காது என்பதை நாம் அறியவேண்டும்.

உதாரணத்திற்கு, ஒருவருக்கு ஆஸ்துமாநோய் இருந்தால் அவருடைய ஒவ்வாமையியல்புடைய சந்ததிகளுக்கும் அதே ஆஸ்துமா நோய்தான் வரவேண்டும் என்பதில்லை. தும்மல்நோய், கரப்பான் எனப்படும் ஒவ்வாமைத் தோல் நோய் போன்ற வேறு ஒவ்வாமை நோய்களினாலும் அவர்கள் தொல்லைக்குள்ளாகலாம். இவைகளைப் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக, ஒவ்வாமையியல்புடையவரிடம் அறிந்து கொள்ள நாம் முயற்சிப்பதைப்போல, அவர் செய்யும் தொழிலுக்கும், ஒவ்வாமைக்கும் இருக்கின்ற மிக நெருங்கிய தொடர்பைப் பற்றியும் சிறிது விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

நோய் நிர்ணயம் சோதித்தறிதல்

இதுபோன்ற ஒவ்வாமை தொடர்பான விவரங்களையெல்லாம் கேட்டறிந்து கொண்ட பின்னர் ஒவ்வாமை இயல்புடையவரைத் தலை முதல் கால் வரை கூர்ந்து கவனித்து, ஒவ்வாமை தொடர்பான மற்ற அறிகுறிகளான சிவந்த நீர் வடியும் கண்கள், காது, நுனி மூக்கு மேல்கோடு மூக்குத்தண்டு வளைவு, எலும்புக் காற்றறை அழற்சி சொத்தைப் பல், தொண்டை நிணத்திசு அழற்சி மூக்கடித்தசை வளர்ச்சி தொற்றுக்கள், தோல்நோய்கள், மூச்சுவிடுவதில் கடினம் அல்லது மூச்சை வெளிவிடும்போது மெல்லிய சத்தம் போன்ற கோளாறுகள் ஏதேனும் தெரிகிறதா என்று எங்களைப் போன்ற ஒவ்வாமை, ஆஸ்துமா, அக்குபங்சர் மருத்துவர் பரிசோதிக்க வேண்டும்.

நோய் நிர்ணயம் _ ஆய்ந்தறிதல்

சாதாரணமாக, மூக்கு உட்புறச் சவ்விலுள்ள ஒவ்வாமை நோய்களுக்கே உரித்தான, அதிலும் குறிப்பாக தும்மல் நோய் கண்டவர்களுக்குச் செய்யப்படும் மூக்குச் சளி ஈசினோபில்களின் எண்ணிக்கை மூலமும், ஒரு சிறிய இரத்தப் பரிசோதனை மூலமும் (CBC, AEC) நோயாளி ஒவ்வாமை யினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இரத்தத்தில் பொதுவாக, பலவகையான இரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். இவற்றுள் ஒருவகை இரத்தச் செவ்வரி வெள்ளையணுக்கள் (Eosinophils), இரத்தப் பரிசோதனைக் கூடங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் இயோசின் (Eosin) எனப்படும் ஒரு வகை நிறமூட்டியை எளிதாக உறிஞ்சி, சிவப்பு நிறமாக மாறிவிடும். ஒருவர் ஒவ்வாமையினால் கேடுற்றிருக்கும்போது அவருடைய இரத்தத்தில் இந்த வகை வெள்ளையணுக்கள் இயல்பை விட அதிக அளவில் அதிகமாகிவிடும். இதைத்தான் பொதுவாக ஈசினோபீலியா என்று அழைக்கிறோம்.

ஆனால் அதேசமயம், அதே நோயாளி வேறு சில ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருடைய இரத்தத்தில் ஈசினோபில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் என்பதை நாம் அறியவேண்டும். இந்த ஒட்டுண்ணிகளில் ஒருவகையான தட்டைப் புழுவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சில சமயங்களில் ஒவ்வாமை உண்டாகி, ஆஸ்துமா இழுப்பும் வந்துவிடும்.

இவைதவிர, இரத்தத்தில் ஒவ்வாமை தொடர்பான மற்ற பரிசோதனைகளான ராஸ்ட் (RAST Radio Allergo Sorbent test) எனப்படும் முக்கியமான மிரீணி என்ற எதிர்ப்பொருட்களின் எண்ணிக்கை, நோயெதிர்ப்புச் செறிவுச் சோதனை ஊநீர் புரதச் சோதனை, இரத்தத்தில் திசு நீர்த் தேக்கி வினை குறைப்பணுக்கள் உயிரணு நச்சுப் பரிசோதனை மற்றும் சிறுநீர், மலம் போன்ற பரிசோதனைகளையும் ஒவ்வாமை இயல்புடையவருக்குச் செய்ய வேண்டும்.

எலும்புக் காற்றறை, மார்பு ஊடுகதிர்ப்படங்கள், தோல் ஒவ்வாமை இருப்பவர்களுக்குத் தேவைப்பட்டால் தோல்திசு ஆய்வு (Skin biopsy) போன்றனவும் சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ளவேண்டும்.

சில நேரங்களில் ஒவ்வாமை இயல்புடையவர், சுவாசம் தொடர்பான நோய்கள் கண்டிருந்தால், குறிப்பாக அவர்களுக்கு சுவாச இயக்கப் பரிசோதனைகளுடன் (pulmonary Function Test PFT) தோலில் செய்யக்கூடிய முக்கியமான ஒவ்வாமைத் தோல் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அலர்ஜி டெஸ்ட் எனப்படும் ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்றால் என்ன?

பொதுவாக தும்மல் நோய், விஷக்கடி போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கொண்ட ஒவ்வாமை தன்மையுடையோருக்கும், அதிலும் குறிப்பாக ஒவ்வாமையினால் ஆஸ்துமா இழுப்பு வரக் கூடியவர்களுக்கும், அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்களைக் கண்டறிய, தோலின் மேலோட்டமாகச் செய்யப்படும் பரிசோதனையே ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்பதாகும். இதுதான் அனைவராலும் அலர்ஜி டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

என்னென்ன பொருட்களுக்குச் செய்ய வேண்டும்?

இந்த முக்கியமான பரிசோதனையைச் செய்வதற்காக, நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பல வகையான சந்தேகிக்கப்படும் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான கரைசல்களை (Diagnostic Allergens) ஒவ்வாமை நிபுணர்கள் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள், காளான்கள், தூசிகள், மர வகைகள், பார்த்தீனியம் போன்ற தாவரங்கள், இலைகள், பூச்சிகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள், ரோமங்கள், சிறகுகள் மற்றும் சைவ, அசைவ உணவுப் பொருட்கள், பழ வகைகள் போன்றவையாகும். இதிலும் மிக முக்கியமானது, வீட்டுத்தூசி உண்ணி (House Dust Mite) அல்லது பூச்சியின் கழிவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கரைசல்தான்!

எப்படிப் பரிசோதனைப் பொருட்களைப் பாதுகாக்கிறார்கள்?

பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கண்டறியப் பயன்படும் இந்த முக்கியமான தோல் பரிசோதனையைச் செய்ய, இது போன்ற சுமார் 250 வகையான ஒவ்வாப் பொருட்களின் கரைசல்களைத் தனித்தனியாக, அவற்றின் வீரியம் குறையாவண்ணம் கெடாமல் குளிர்சாதனப் பெட்டியில் குளிர்சங்கிலிப் பாதுகாப்பு முறையில் (2/8CCold Chain Maintenance) எங்களைப் போன்ற ஒவ்வாமை _ ஆஸ்துமா _ அக்குபங்சர் சிறப்பு மருத்துவர்கள், தங்களின் முதலுதவி வசதிகள் பெற்ற மருத்துவமனைகளில் எந்நேரமும், பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

எங்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது?

கண்ட மருத்துவக் கூடங்கள், இதில் அனுபவமும், பயிற்சியும், பதிவும் பெறாத மருத்துவர்கள், போதிய முதலுதவி வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்த வகையான ஒவ்வாமை தோல் பரிசோதனைகளைச் செய்துகொள்வதைக்கட்டாயம் ஒவ்வாமைக் கண்டவர்கள் தவிர்க்க வேண்டும்.

எத்தனை செய்ய வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை நோயாளிக்கு, என்னென்ன ஒவ்வாப் பொருட்களினால் ஒவ்வாமைக் கேடுகள் அல்லது நோய் அறிகுறிகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளன என்பது பற்றி, ஒவ்வாமை மருத்துவரும், நோயாளியும் நன்கு கலந்துரையாடி, பல வகையான ஒவ்வாப் பொருட்களில், ஒருவருக்குக் காரணமாகக் கருதக்கூடிய, ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையுள்ள சுமார் 50_70 வரையிலான அன்றாடம் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான ஒவ்வாப் பொருட்களை மட்டுமாவது சோதனைக்குத் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

உடலின் எந்தப் பகுதியில் செய்ய வேண்டும்?

பொதுவாக, இப்பரிசோதனைகளை ஒவ்வாமையுள்ள பெண் நோயாளிகளுக்கு முழங்கைகளுக்குக் கீழ் இரு முன்கைகளின் கீழ்புறத்திலும், ஆண் மற்றும் சிறுவர்களுக்கு மேல்புற முதுகிலும், கைகளிலும் 10_15 நிமிடங்களுக்குள் பரிசோதித்துவிடலாம்.

எப்படி செய்ய வேண்டும்?

ஒவ்வாப் பொருட்களின் கரைசலின் ஒரே ஒரு துளியை, ஒவ்வொன்றாக எடுத்துத் தோலின் மேல்விட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கூர்மையான சிறிய குச்சி (Sterilised Tooth Prick) கொண்டு தேய்த்துப் பரிசோதிக்கும் சோதனை (Scratch Allergens Test) மூலமும், ஒவ்வாப் பொருட்களின் கரைசல்கள் கொண்ட தோல் ஒட்டும் துணி மூலமும் (Patch test). ஒவ்வொன்றாகக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சின்னஞ்சிறிய ஊசிகளைக் கொண்டு மிகவும் லேசாகக் குத்திப் பரிசோதிக்கும் சோதனை (prick test) மூலமும். ஒரே சமயத்தில் பல ஊசிமுனைகளைக் கொண்டு (Multi Test Applicator) தோலின் மேலோட்டமாகக் குத்தி அல்லது ஊடுருவிப் (Prick or puncture) பரிசோதிக்கும் சோதனைகள் மூலமும் ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சந்தேதிக்கும் ஒவ்வொரு ஒவ்வாப் பொருட்களின் கரைசலில் ஒரே ஒரு துளியை (1 cc), சின்னஞ்சிறிய ஒரு முறை பயன்படுத்தும் (Disposable) 1 மி.லி. இன்சுலின் ஊசி கொண்டு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சாதாரண மாகக் காசநோய்த் தாக்கம் அறியச் செய்யும் மேன்டு (Mantoux text) பரிசோதனை போல் தோலினூடே செலுத்திப் பரிசோதிக்கும் தோல் ஒவ்வாமைப் பரிசோதனை (Endermal or Intradermal Allergen Test)) கொண்டும் ஒவ்வாப் பொருட்கள் எவை எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இவை போன்ற ஐந்து விதமான ஒவ்வாமைத் தோல் பரிசோதனைகளில், மிக முக்கியமானது மூன்றாவதாகக் குறிப்பிட்ட, மிகவும் லேசாகக் குத்திப்பரிசோதிக்கும் சோதனை (prick test)) தான் மிக முக்கியம். மற்ற நான்கு வகையான தோல் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்க முடியாத ஒவ்வாப் பொருட்களை, இச்சோதனை மூலம் எளிதில் கண்டறிந்து உறுதி செய்துவிடலாம்.

தூண்டும் பரிசோதனையா? அப்படி என்றால் என்ன?

சில வகை ஒவ்வாமை நோயாளிகளுக்கு இத்தோல் பரிசோதனைகளுடன், ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நேரடியாக நுண்துகள்களாக (Spray) கண், காது, மூக்கு மற்றும் மூச்சுக் குழாய்களுக்குள் கவனமுடன் செலுத்திப் பார்த்து (Provocative Test), அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்கள் எவை எவை என்றும் ஒப்பிட்டுக் கண்டறிந்து உறுதி செய்யலாம். இப்பரிசோதனைக்குக் கிளறும் அல்லது ஒவ்வாமையைத் தூண்டும் பரிசோதனை என்று பெயர். தீவிர சிகிச்சைப் பிரிவு கொண்ட பெரிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கூடங்களில் மட்டுமே இச்சோதனையைக் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

தோல் பரிசோதனைக்குப் பின் கவனம்:

இவ்வாறு தோல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், 15_30 நிமிடங்களுக்குள், ஒவ்வாப் பொருட்கள் தோலின் மேல் அல்லது தோலின் ஊடே செலுத்தப்பட்ட இடங்கள் சிவந்தும், தடித்தும் (Erythema. Wheal) விடுவதைக் காணலாம். இவ்விடங்களை, இதற்கென்றே சிறப்பு அளவு கோலின் (Skin Test Reaction Gauge) முறைப்படி அளந்து, எவையெவை அந்தக் குறிப்பிட்ட மேற்கொண்ட 6, 24, 72 மணி நேரங்களில், பரிசோதிக்கப்பட்டஇடங்களில் வீக்கம், நமைச்சல் மற்றும் வலி ஏதேனும் இருக்கிறதா என்பதை ஒவ்வாமை நோயாளிகளோ, அவர் நலம் விரும்பிகளோ கண்டறிந்து ஒவ்வாமை மருத்துவரிடம் தெரிவிக்கலாம். தோல் பரிசோதனை செய்யப்பட்ட தடித்த, சிவந்த இடங்கள் சில மணி நேரங்களிலேயே மறைந்து விடுவதால், இச்சோதனையால் மட்டும் அன்றாடப் பணிகளுக்கு எந்தவிதமான இடையூறும் நேராது என்பதைத் தெளிவாக ஒவ்வொரு ஒவ்வாமை நோயாளியும் அறிய வேண்டும்.

தோல் பரிசோதனைக்கு முன் கவனம்

ஆனால், தோல் பரிசோதனைகளை மேற் கொள்வதற்கு 2_3 நாட்களுக்கு, ஒவ்வாமையைக் கட்டுப் படுத்தக் கொடுக்கப்படும் மாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ஒவ்வாமையுடையோர் அப்போதைக்கு அத்தொந்தரவுகள் அதிகம் இல்லாமலும், குறிப்பாக ஆஸ்துமா இழுப்பு இல்லாமலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இதற்காக ஒவ்வாமை மருத்துவர் மேற்பார்வையில் மேல் பூச்சு மருந்துகள் ஆஸ்துமா உள்ளிழுப்பான்கள், மூச்சுக் குழல் விரிவாக்க மாத்திரைகள் (Bronchodilators) போன்றவற்றை எப்போதும் போல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

தோல் பரிசோதனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை

ஸ்டீராய்டு மாத்திரைகள் தினந்தோறும் பயன்படுத்தியே ஆக வேண்டிய ஸ்டீராய்டு மாத்திரைகள் சார்ந்த ஆஸ்துமா நோயாளிகளுக்கு (Steroid Dependent Asthmatcatucs) , இவ்வகையான ஒவ்வாமை தோல் பரிசோதனைகளை மிகவும் கவனமுடனும், தேவைப் பட்டால் மட்டுமே மேற்கொள்வது நல்லது. இதே போல், இப்பரிசோதனைகளை உட்கார்ந்தும், நின்று கொண்டும் செய்து கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அரிதாக சில நேரங்களில் சில ஒவ்வாமை நோயாளிகளுக்கு பயத்தாலும், ஒவ்வாப் பொருட்களின் கரைசல்களாலும், வழக்கத்தைவிட அதிக வியர்வை, நெஞ்சு படபடப்பு, மயக்கம் மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சியும் (Anaphylaxis) ஏற்படலாம். எனவேதான் இவற்றையெல்லாம் காலதாமதமின்றி நேரத்துடன் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொள்ள, ஒவ்வாமை மருத்துவர் முன்னேற்பாடாக, தமது மருத்துவமனைகளில் போதிய வசதிகளைச் செய்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். Dysprotenemia எனப்படும் ஒரு வகைப் புரதமின்மை, சில ஒவ்வாமை நோயாளிகளுக்கு மட்டுமே அரிதாக ஏற்படுவதாகத் தெரிகிறது.

தோல் பரிசோதனை முடிவுகள்

எப்போதாவது, சில சமயங்களில் வெகுசில ஒவ்வாமை நோயாளிகளுக்கு மட்டும் தோல் ஒவ்வாமைப் பரிசோதனைகளின் போது, ஒவ்வாமையாக இருக்கும் என்று சந்தேகப்படும் ஒவ்வாப் பொருள், அதிகத் தடிப்பு, வீக்கம் போன்றவற்றை உண்டாக்காமலும் (False Negative Reaction), தமக்கு இப்பொருள் ஒவ்வாமையற்றது என்று உறுதியாக எண்ணிக் கொண்டிருப்பது அதிகத் தடிப்பு, வீக்கத்தை (False Positive) உண்டாக்கியும் விடும் என்பதை இங்கு நாம் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்களின் ஒவ்வாமையைப் பரிசோதித்து முடிவு தெரிந்து கொள்ளும் போது, ஒவ்வாமையுடையவர் ஏற்கனவே அந்த உணவுப் பொருளை உண்ணும்போது, ஒவ்வாமைத் தொல்லைகள் அதிகமாகத் தெரிகின்றதா என்பதைப் பற்றி ஒவ்வாமை மருத்துவர், நோயாளி கலந்துரையாடுவது எப்போதும் நல்ல பயன்தரும் முயற்சியாகும். இதுபோல் நேரம் அதிகமானாலும் ஒவ்வொரு ஒவ்வாப் பொருளுக்கும் ஒவ்வாமை அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பையும் அறிவது மிகவும் நல்லது.

சிறிது உராய்ந்தாலும், கீறினாலும், லேசாக அடிபட்டாலும் தோலில் அந்தந்த இடங்களில் தானாக அதிகத் தடிப்பாகும் நிலையான தோல் வரைவியல் அல்லது கீறல் தழும்பு எனப்படும். ஒரு வகை தோல் பாதிப்பு கொண்ட ஒவ்வாமை நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது ஓர் ஒவ்வாமை மருத்துவருக்கு அதிகக் கவனமும், பொறுப்பும் தேவைப்படுகின்றன.

காலம் முழுவதும் துன்பத்தைக் கொடுக்கவல்ல ஒவ்வாமைக் கேடுகளைப் பார்க்கும்போது, எப்போதாவது, யாருக்காவது ஏற்படும் இது போன்ற விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றி அதிகக் கவனமும், பயமும் கொள்ள வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது!

ஒவ்வாமை கூருணர்ச்சிக் குறைப்பு ஊசிகள் அல்லது அலர்ஜி தடுப்பூசிகள்

இவ்வாறு, பல்வேறு ஒவ்வாமைக்கேடுகள் உண்டாகக் காரணங்களான, ஒவ்வாமைப் பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து பின்னர், தவிர்க்கக் கூடிய ஒவ்வாப் பொருட்களைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

அப்படியும் தவிர்க்க அல்லது ஒதுக்க முடியாத, மிகவும் அவசியமான அந்தந்த ஒவ்வாமை நோய் அறிகுறிகளுக்குக் காரணமான, ஒவ்வாப் பொருட்களுக்கு மட்டும் ஒவ்வாமை கூருணர்ச்சிக் குறைப்பை உண்டாக்கும் சிகிச்சையை (Desensitisation or Hyposensitisation or Immunotherapy) மேற்கொள்வது நல்ல பயன் தரும் முயற்சியாகும்

Thanks to : ஈகரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக